சக்கரவர்த்தி திருமகன்  நம் சரித்திரத்தின் தலைமகன்

Spread the love

– டி.ஆர்.ஜவஹர்
அறிவார்ந்த வாசகர்களே,
ஸ்ரீ ராம காவியம் வால்மீகி என்ற கவிஞனின் கற்பனையில் உதித்த ஒரு கட்டுக்கதை அல்ல, மாறாக அது, பெருமை வாய்ந்த இந்த பாரத மண்ணை மாண்போடு ஆண்ட சூரிய வம்ச வழியில், ரகு குலத்தின் தலைச்சிறந்த ஒரு சக்கரவர்த்தி திருமகனைப் பற்றி வால்மீகி என்ற வாலாற்று விற்பன்னன் தொகுத்து அளித்த ஒரு சரித்திர காவியம்.
தற்கால அறிவும், ஆற்றல்களும், ஆய்வு முறைகளும் முழுமையாக எட்ட முடியாத காலக் கட்டங்களில் நடந்தவை என்ற ஒரே காரணத்தினால் இந்த வரலாறு வெறும் கதையாகி விடாது. பல நூறு தலைமுறைகளாக, பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக வழி வழியாக மக்களால் பேசப்பட்டும், போற்றப்பட்டும் வரும் ஸ்ரீ ராமனின் வாழ்க்கை வரலாற்றுக்கு இமயம் முதல் குமரி வரை உள்ள பாரத மண்ணில் எங்கு பார்த்தாலும் சான்றுகள் நிறைந்திருக்கின்றன. வடக்கே அயோத்தி அல்லது பிரயாகையில் தொடங்கி மத்தியில் உள்ள தண்டகாரண்யம் அடங்கி தென் கோடியில் இருக்கும் சேதுக்கரை மற்றும் தனுஷ்கோடி வரை ஸ்ரீராமன்
வாழ்ந்ததற்கான தடயங்களும், சுவடுகளும், வட்டார சான்றுகளும் படர்ந்து, பரவிக் கிடக்கின்றன. இது இன்றும் நாம் எங்கும் காணும் நிதர்சன உண்மையாகும்.
‘புடம் போட்ட’ பகுத்தறிவாளர்கள் இதை மறுக்கமாட்டார்கள். மலிந்து கிடக்கும் போலி பகுத்தறிவாளர்களோ இதை மறைக்கவே முயற்சிப்பார்கள். ஆனால் பல கோடி சாமான்ய மக்களோ எந்தவித சலனமோ, ஐயமோ இல்லாமல் அவர்களுக்கே உரித்தான சிரத்தையோடும், பக்தியோடும், நம்பிக்கையோடும் ஸ்ரீராமனை தொன்று தொட்டு வழிபட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஏனெனில் ஸ்ரீராமன் அவர்கள் வீட்டுப்பிள்ளை. பாரத நாட்டின் சரித்திர தலைவன். நமது சனாத தர்மத்தின் முழுமுதல் வடிவம். அப்பேற்பட்ட மக்களே ஸ்ரீராமாவதாரத்திற்கு சிறந்த ஆதாரம்.
அவதாரம் ஒன்று; பரிமாணங்கள் பல
மனித வாழ்க்கையிலுள்ள அனைத்துப் பரிமாணங்களையும் அடக்கிய அவதாரம்தான் ஸ்ரீராமாவதாரம். பிறப்பிலிருந்து இறுதி வரை ஒருவனது வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ சம்பவங்கள் தினந்தோறும் நடக்கின்றன. சுகங்கள், சோதனைகள், துக்கங்கள், சங்கடங்கள், வெற்றிகள், தோல்விகள் இத்தனையும் சமாளித்து, அதே சமயம் நெறிவழுவாமல், குணம் கெடாமல் தனது கடமைகளையும் நிறைவேற்றி ஒரு முழுமையான மனிதனாக இருந்து காட்டி மனித வாழ்க்கைக்கே ஒரு உதாரணமாகத் திகழ்ந்தார் ஸ்ரீராமர். அதனால்தான் இன்றைக்கும் ‘ஸ்ரீராம காவியம்’ உலகத்தார் அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
ஸ்ரீராமர் மகாவிஷ்ணுவின் அவதாரம்தான். அனைத்து தெய்வ சக்திகளையும் உள்ளடக்கியவர்தான். இருந்த போதிலும் ‘ராமர்’ ஏன் இப்படி அல்லல்பட வேண்டும்? இங்கேதான் ஸ்ரீராம அவதாரத்தின் சூட்சுமமே அடங்கி இருக்கிறது. மானிடர்களுக்காக, அவர்களில் ஒருவனாக, அவர்களோடு இணைந்து வாழ்ந்து அவர்களுக்கு ‘நல்வழி’ காட்டுவதற்காகவே ஏற்பட்டதுதான் இந்த ராமாவதாரம்.
வாழ்க்கை என்பது பஞ்சு மெத்தையல்ல. கடவுளாக இருந்தாலும் மனிதனாகப் பிறந்து விட்டால் கடமைகளை, கர்மாக்களை நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதனை உலக மக்களுக்கு உணர்த்தவே ராமர் அவதரித்தார். தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு ஒரு உதாரண புருஷனாக அமைந்தவர் ஸ்ரீராமர்.
மற்றொரு பரிமாணமும் உண்டு.
பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் ராம ராஜ்ஜியத்தை பற்றி அடிக்கடி அளப்பதுண்டு. மக்களும் ராம ராஜ்ஜியத்திற்காக இன்றும் ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான ‘பூலோக சொர்க்கத்தை’ உருவாக்கி ஒரு அரசன் (ஆட்சியாளர்கள்) செயல்பட வேண்டிய முறையையும், கடமையையும், கடைப்பிடிக்க வேண்டிய ராஜதர்மத்தையும் உணர்த்திய பெருமை ஸ்ரீராமருக்கே உண்டு. இராவணனின் உருவத்தில் உலகிற்கு ஏற்பட்ட கொடுமைகளைத் தகர்த்து, மக்களின் சந்தோஷமான வாழ்க்கைக்கு அடிகோலி அயோத்தியில் ராஜ்ய பரிபாலனம் செய்து ‘நல்லாட்சி’ என்றால் என்ன என்பதை உணர்த்திய அவதார புருஷன் ஸ்ரீராமர்.
ஆக, குடிமகனாகட்டும், முடியரசனாகட்டும், ஸ்ரீராமரே வழிகாட்டி. இதுவே ராமாவதாரத்தின் மகிமை, மகாத்மியம்.
இப்படி எண்ணற்ற நன்னெறிகளை உள்ளடக்கிய ராமாயணம் என்ற இதிகாசம் இந்த பரந்த பாரத தேசத்தின் மூலை-முடுக்கெல்லாம் பரவி, இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரின் நாடி நரம்புகளிலும் புகுந்து அவர்களது பேச்சிலும், மூச்சிலும் இணைந்து, கலந்து நமது கலாச்சாரத்திற்கே ஒரு தர்ம சாஸ்திரமாக விளங்கி கொண்டிருக்கிறது.
                     !!ஜெய் சீதா ராம்!!
(This article was written in 2004)

Spread the love
, ,